முருங்கைக்கீரை பொரியல்

தேவையானவை:

முருங்கைக்கீரை – 2 கப்

சின்ன வெங்காயம் – 10

கடுகு, சீரகம் – சிறிதளவு

வற்றல் – 4

தேங்காய் – தேவையான அளவு

செய்முறை:

கடுகு, சீரகம், வற்றல் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். வதங்கியதும் கழுவிய கீரையை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். கீரை நன்கு வெந்த பின் தேங்காய் சேர்த்து கிளறிய பின் பரிமாறலாம்.

வஞ்சிர மீன் பொரியல்

தேவையானவை:
நன்கு சுத்தம் செய்யப்பட்ட மீன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 10

பூடு – 5

சீரகம் – அரை ஸ்பூன்

மிளகு அரை ஸ்பூன்

பெருஞ்சீரகம் அரை ஸ்பூன்

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் சிறிது

மிளகாய் தூள் – தேவையானது

பொரிக்கத் தேவையான எண்ணெய் 200 ml

செய்முறை:

சின்னவெங்காயம், பூடு, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், உப்பு, மிளகாய் தூள் தேவையானது இவைகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். அரைத்த விழுதைக் கழுவிய மீனில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பின் மீனைப் பொரிக்கலாம். பொரித்த பின் பரிமாறலாம் .

பயன்– மீன் உணவு வைட்டமின்கள் நிறைந்தது.

வெண்டைக்காய் பச்சடி

தேவையானவை:
வெண்டைக்காய் = கால் கிலோ

சின்ன வெங்காயம் – 20 (உரித்து நறுக்கவும்)

தேங்காய் = அரை மூடி

சீரகம் – 1 ஸ்பூன்

தாளிக்க எண்ணெய்

கடுகு

கறிவேப்பிலை

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

புளி – 50 g

செய்முறை:

வெண்டைக்காயை பொடியாக வட்ட வட்டமாக நறுக்கவும். தேங்காய் மற்றும் சீரகம் போட்டு அரைக்கவும். கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வெண்டைக்காயைப் போட்டு 7 நிமிடம் வதக்கவும். மிளகாய் பொடியைப் போட்டு கிளறவும். புளி எடுத்துக் கரைத்து ஊற்றவும். உப்பு போடவும். நன்கு கொதித்த பின்பு தேங்காயையும் போட்டு கொதிக்க விடவும் .நன்கு வெந்தவுடன் அடுப்பை Off செய்துவிட்டு சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

வாழைப்பூ, முருங்கைக்கீரை – துவட்டல்

தேவையானவை:


வாழைப்பூ – பாதி

சி.வெங்காயம் – 6

முருங்கைக்கீரை கொஞ்சம்

மிளகாய் வற்றல் – 3

தேங்காய்- 1/2 மூடி

தாளிக்க தேவையான எண்ணெய்

சீரகம், கடுகு, உளுந்து சிறிது

செய்முறை:

வாழைப்பூ – பாதி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும், நறுக்கி தன்ணீரில் போடவும். சி.வெங்காயம் பொடியாக நறுக்கவும், முருங்கைக்கீரை கொஞ்சம் காம்பு இல்லாமல் சுத்தம் செய்யவும்.
முதலில், வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உ.பருப்பு, சீரகம், வெங்காயம், மி.வற்றல் தாளித்து வாழைப்பூவையும் போட்டு உப்பு போட்டு வதக்க வேண்டும். 3 நிமிடம் வதக்கிய பின்பு கீரையை நன்கு கழுவி அதனுடன் போட்டு வதக்க வேண்டும். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கலாம். நன்கு சுருள வதங்கிய பின் அரை மூடி தேங்காயையும் திருகி போடலாம்.

அடுப்பை Off பண்ணிவிட்டு வெறும் வாயிலேயே சாப்பிடலாம்சோற்றுக்கும் தொட்டுக்கலாம்.

பயன் – கீரை – Iron, வாழைப்பூ சிறுநீரகக் கற்களைப் போக்கும்.

இடி சாம்பார்

தேவையானவை:

துவரம் பருப்பு – 1/2 கப்

சின்ன வெங்காயம் – 6

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 2

முருங்கைக்காய்

புளி – சிறிதளவு

மல்லி ( தனியா) 2 Spoon

சீரகம் – அரை Spoon

மிளகு – அரை Spoon

வெந்தயம் – 1 Spoon

காயத்தூள் – சிறிது

அரிசி – சிறிது

செய்முறை:

மல்லி, சீரகம் , மிளகு, வெந்தயம், காயத்தூள், அரிசி, இதை அனைத்தையும் வறுத்து – இடித்து வைக்கலாம் அல்லது மிக்ஸியில் தூள் பண்ணி வைத்து இருக்க வேண்டும். பருப்பை வேக வைத்த பிறகு சாம்பார் காய்கறிகளை உப்பு போட்டு வேக வைத்த பிறகு சாம்பாரை கொதிக்க வைத்த பிறகு இடித்தவைகளைப் போட்டு ஒரு கொதி கொதித்த பின்பு அடுப்பை off பண்ண பிறகு இட்லிக்கு இந்த சாம்பாரை பரிமாறலாம், சுவையாக இருக்கும்.

வெந்தயக் களி (ஏழைகளின் அல்வா)

தேவையானவை:


வெந்தயம் – 25g

பச்சரிசி – 100g

வெல்லம் – 200g

நல்லெண்ணெய் – 100 ml

செய்முறை:

வெந்தயம், அரிசியை ஊற வைக்கவும். 3 மணி நேரம் ஊறிய பின் நன்கு அரைத்து எடுக்கவும். தண்ணீர் ஊற்றி அரைக்கலாம். ஆட்களைப் பொறுத்து அரிசி, வெந்தயத்தின் அளவைக் கூட்டலாம். அரைத்த மாவில் தண்ணீர் ஊற்றி கரைக்கவும். கரைத்த மாவை அடுப்பில் வைத்து கிளறவும். வெல்லத்தையும் போட்டு நன்கு கிளறவும். நல்லெண்ணெய்யையும் ஊற்றிக் கிளறவும். Sim – ல் 7 நிமிடம் கிளறவும். நன்கு கெட்டியாக களி பதத்தில் வந்ததும் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி இறக்கவும். பின்பு சாப்பிடலாம்.


பயன்: சூட்டைத் தணிக்கும் அல்சர் குணமாகும்.

தக்காளி-வெங்காய சட்னி

தேவையானவை:
நல்ல தக்காளி – 3

சின்ன வெங்காயம் – 20

பச்சை மிளகாய் – 3 (காரம் அவரவர்க்குத் தேவையான அளவு கூட்டலாம்)

பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க தேவையான எணெணய் கடுகு, கறிவேப்பிலை

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு இவைகளை நன்கு வதக்கவும். சிறிது நேரம் கழித்து ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்து எடுத்த சட்னியை நன்கு எண்ணெய் ஊற்றி தாளிக்கவும்.தோசை, இட்லிக்கு அவ்வளவு ருசியாக இருக்கும். தேவைப்படுபவர்கள் அரை மூடி தேங்காய் 50 கிராம் பொட்டுக்கடலையையும் வதக்கி அரைக்கலாம்.

பயன்-சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும்.

தக்காளி சாதம்

தேவையானவை:

பாசுமதி அரிசி – 1 கப்

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூடு பேஸ்ட் சிறிது

பெருஞ்சீரகம், மிளகு, சீரகம் தூளாக்கவும் ( 1 ஸ்பூன்)

கறி மசால் – சிறிது

ஏலக்காய் – 3

கல்பாசி- சிறிது

பெரிய வெங்காயம் – 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிது

உப்பு

மஞ்சள் தூள்

தாளிக்க எண்ணெய், தேவைப்பட்டால் நெய்

செய்முறை:

பாசுமதி அரிசியை ஊற வைக்கவும், மிளகு, சீரகம், பெருஞ்சீரகத்தை தூளாக்கவும், இஞ்சி, பூடை Paste ஆக்கவும், தக்காளி பெரிய வெங்காயம், ப மிளகாயை நறுக்கி வைக்கவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி நன்கு சூடாகியதும் கறி மசால் பெருஞ்சீரகம், மிளகு, சீரகத்தூள், கறிமசால், கல்பாசி / ஏலக்காய் மற்ற பொருட்கள் எல்லாம் போட்டு கிளறவும். உப்பு, மஞ்சள் தூள் போடவும் தேவைப்பட்டால் முந்திரி 8 ஐ வறுத்துப் போடவும். ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். அரிசி 20 நிமிடம் ஊறிய பின் அரிசியைக் குக்கரில் அந்த தண்ணீர் உள்ளதில் போட்டு குக்கரை மூடி வைக்கவும். 3 விசில் வந்ததும் Off பண்ணவும். சிறிது நேரம் கழித்து சாதத்தைப் பரிமாறலாம். Plain பிரியாணி போல இருக்கும்.
தகுந்த தொடு கறி வைத்துச் சாப்பிடவும்.

மொறுமொறு முந்திரி பக்கோடா

தேவையானவை:

கடலை மாவு – 200 கி

பச்சரிசி மாவு – 100g

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

முந்திரிப்பருப்பு 150 g

சி- வெங்காயம் – 15 (பொடியாக நறுக்க வேண்டும் )

மல்லி இலை, கறிவேப்பிலை பொடியாக நறுக்க வேண்டும்

மிளகுத்தூள் – சிறிது

மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்

பொரிக்க எண்ணெய் 350 மிலி

இஞ்சி பூடு பேஸ்ட் சிறிது

சீரகப் பொடி – சிறிது

பெருஞ் சீரகப் பொடி – சிறிது

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயதூள், சி- வெங்காயம், இஞ்சி பூடு பேஸ்ட், மிளகாய் தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகத்தூள், மல்லி இலை, கறிவேப்பிலை அனைத்தையும் ஒரே அகலப் பாத்திரத்தில் போட்டு 100 மிலி எண்ணெயையும் தண்ணீர் சிறிதையும் ஊற்றி பக்கடா மாவு பதத்திற்கு (உதிரியாக) இருக்கும் படி பிசைந்து எண்ணெயை நன்கு கொதிக்க வைத்த பிறகு மாவை கையில் அள்ளி பக்கடா போல அடுப்பில் உதறி வேகவைக்கவும். அடுப்பை Sim – ல் வைத்தே வேக வைத்து பொன்னிறம் வந்தவுடன் சாப்பிடலாம், முந்திரியையும் மாவில் போட்டு பிசைந்து போட வேண்டும்.


பயன்: முந்திரியை தனியாக தின்ன விரும்பாத குழந்தைகள் இதைச் சாப்பிடுவதால் சத்து பெறுவர்.

தேங்காய் சட்னி

தேவையானவை:

தேங்காய் – தேவைக்கேற்ப

இஞ்சி – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

புளி – சிறிதளவு

உப்பு

தாளிக்க:

கடுகு

பெருங்காயத்தூள்

சின்ன வெங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை:

தேங்காய், இஞ்சி , பச்சை மிளகாய், புளி, உப்பு தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையானவைகளை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். பொறி கடலை சேர்த்தும் அரைக்கலாம்.